இன்று இணையத்தின் பயன்பாடும் அதன் பயனும் எல்லோருக்கும் தெரிந்ததே. இணையத்தில் நம் தொழிலுக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது நம் தனிப்பட்ட பகிர்தலுக்கோ ஒரு வெப்சைட் இன்றியமையாத தேவையாய் இருக்கிறது.
உள்ளூர் தொழில்/வணிகத்திற்கு இணையதளத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் பற்றிய ஆங்கில கட்டுரையை
இங்கு பார்வையிடலாம்.
ஒரு வெப்சைட்டை உருவாக்குவதற்கு என்னென்ன தேவைகள் என்பதை வரிசையாகப் பார்ப்போம்.
1. இணைய(தள) முகவரி (Domain):
முதலாவதாக நாம் ஒரு இணைய முகவரியை
(Domain Name) தேர்ந்தெடுத்து அதை பதிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு நம் இணையதள முகவரியை
mybusiness.com என்று வைத்துக் கொள்வோம். இதை "
டொமைன்", "
URL", "
Web Address" என்றும் சொல்லலாம். மேலும்
www.,
http://,
http://www. ஆகிய முன்னொட்டுக்கள்
(prefix) சேர்த்தும் சேர்க்காமலும் குறிப்பிடலாம்.
மேலும் இணைய முகவரி
(Domain) என்பது இமெயில்
(Email) முகவரி அல்ல. இமெயில் முகவரியானது இணைய முகவரிக்கு முன்னால் ”
@” என்ற குறியோடு இருப்பதாகும். அதாவது
name@mybusiness.com என்றவாறு இருப்பது தான் இமெயில் முகவரி.
மேலும் இணையதள முகவரி பதிவு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படைத் தகவல்களை அடுத்த இடுகைகளில் பார்ப்போம்.
2. வெப் ஹோஸ்டிங் (Web Hosting):
இப்போது நீங்கள் உங்கள் இணையதள முகவரியை
(Domain Name) பதிவு செய்துவிட்டீர்கள். அடுத்து அந்த இணையதள முகவரியை இண்டர்நெட்டில் தட்டினால் உங்கள் இணையதளம் தெரிய வேண்டும் அல்லவா? அதற்கு ஒரு கம்ப்யூட்டரில் உங்கள் தகவல்களை சேமித்து வைத்து அதை உங்கள் இணைய முகவரியுடன்
(Domain Name) இணைக்க வேண்டும். சரி அப்படியானால், என்னிடம் கம்ப்யூட்டர் இருக்கிறது, இண்டெர்நெட் இணைப்பும் இருக்கிறது. இப்போது என்னுடைய கம்ப்யூட்டரில் இருக்கும் தகவல்களை என்னுடைய இணைய முகவரியுடன்
(Domain Name) இணைக்க முடியாதா என்று கேட்டால், முடியாது!
ஏனெனில் நாம் உபயோகப்படுத்துவது நம் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான கம்ப்யூட்டர் ஆகும். இதை தனி நபர் கணினி
(PC-Personal Computer) என்று சொல்லலாம். மேலும் நாம் இணையத் தொடர்பு வைத்திருந்தாலும் பயன்பாட்டாளராகத் தான்
(Client User) நம் கம்யூட்டரைப் பயன்படுத்துகிறோம். அதாவது இண்டர்நெட் சர்வராக
(Web Server) உபயோகப்படுத்தப்பட வில்லை.
இதற்காகவே இணையத்தில் வெப் சர்வர்
(Web Server) சேவையை வழங்கும் நிறுவனங்கள்
(Web Hosting Company) நிறைய இருக்கின்றன. அவர்கள் பலதரப் பட்ட இணையதள வடிவமைப்புகளுக்கு ஏற்ற வகையில் தொழில்நுட்பம் சார்ந்த சாப்ட்வேர்
(Software) மற்றும் ஹார்டுவேர்
(Hardware) தேவைகளை பார்த்துக் கொள்வார்கள். அவர்களிடம் நாம் நம் இணையதளத்திற்கு தேவையான இடத்தை
(Disk Space) வாடகைக்கு வாங்கி, அதில் நம்முடைய தகவல்களை சேமித்து
(Host) நம் இணையதள முகவரியோடு அழகான வடிவமைப்புடன் இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் வெப் ஹோஸ்டிங் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை அடுத்த இடுகைகளில் பார்ப்போம்.
3. இணையதள வடிவமைப்பு (Website Design):
மேற்கூறிய விசயங்கள் நம் இணையதளத்திற்கு அடித்தளமானவை. ஆனால் நாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது நம்முடைய இணையதள வடிவமைப்பில் (Website Design) தான். இது நம் தேவையையும் விருப்பத்தையும் பொறுத்து அமையும்.
ஒரு சாதாரண இணையதளத்தை அதற்கான தொழில்நுட்ப அறிவும் அனுபவமும் இல்லாமலேயே இணையத்தில் கிடைக்கும் இலவச வீடியோ டுட்டோரியல்
(Video Tutorials) மற்றும் கட்டுரைகள்
(How to- Articles) இவைகளை பயன்படுத்தி நீங்களே உருவாக்க முயற்சிக்கலாம். ஆனால் ஒரு அனுபவம் கொண்ட வெப் டிசைனர் மூலம் சிரமமில்லாமல் உரிய நேரத்தில் உருவாக்கிக் கொள்ள முடியும். வணிகம் மற்றும் நிறுவனம் சார்ந்த இணையதளங்களை வெப் டிசைனர் மூலம் உருவாக்குவதே நல்லதும் கூட.
ஒரு தரம் மிகுந்த இணையதளத்திற்கான அடிப்படை அம்சங்கள் சில:
- கண்ணையும் கருத்தையும் கவரும் எளிமையான வடிவமைப்புடன் (Simple & Attractive Design) உங்களுக்கான தனித்துவமான அடையாளமாக உங்கள் இணையதளம் இருக்க வேண்டும்.
- உங்கள் தொழில் சார்ந்த தேவையான விவரங்களை எளிமையாக தெரிந்து கொள்ள ஏதுவான வழிமுறையுடன் (Easy Navigation & Accessibility) கட்டமைக்கப்பட்டதாக உங்கள் இணையதளம் இருக்க வேண்டும்.
- உங்கள் இணையதளத்தை பார்வையிடும், வருகை தரும் நபரோடு ஒரு நட்போடு கூடிய உரையாடலுக்கு (Interactive) ஏதுவாக உங்கள் இணையதளம் இருக்க வேண்டும்.
- இணையதள முகவரியோடு இணைந்த எளிய இமெயில் அடையாளம் (Eg: name@mybusiness.com) (Simple Domain Based Email) உங்களுக்கு இருக்க வேண்டும்.
- Google.com போன்ற தேடு பொறி மூலம் பொருத்தமான தேடலுக்கு (keywords) உங்கள் இணையதளம் அகப்படும் வண்ணம் (Search Engine Friendly & Optimization) இருக்க வேண்டும்.
- உங்கள் இணையதளம் வேகமாக பதிவிறக்கம் (Download) ஆக வேண்டும்.
இவை முக்கிய அம்சங்கள் தானே தவிர முழுமையானவை அல்ல; உங்கள் தேவையைப் பொறுத்து இது இன்னும் நீளலாம். உங்கள் இணையதளத்தை வடிவமைக்கும் போது ஒரு தேர்ந்த வெப் டிசைனரை அணுகி கலந்துரையாடுவது நல்லதாகும்.